siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

10 வருடங்களாக வயிற்றில் முள்ளுக்கரண்டியுடன் வாழ்ந்த நபர்

23.08.2012.தாங்க முடியாத வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவரின் வயிற்றிலிருந்து 9 அங்குல நீளமான முள்ளுக் கரண்டியொன்றை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
லீ கார்ட்னர் (40 வயது) ௭ன்ற நபர், 10 வருடங்களுக்கு முன் உணவு உண்ணும்போது முள்ளுக்கரண்டியை தவறுதலாக விழுங்கியுள்ளார். அதை விழுங்கியதால் ௭துவித பாதிப்பும் உடனடியாக ஏற்படாத நிலையில் அவர் அது தொடர்பில் மறந்து விட்டிருந்தார்.
ஆனால், காலம் செல்லச்செல்ல லீ கார்ட்னர் பல்வேறு வயிற்று உபாதைகளால் பாதிக்கப்பட்டதுடன் அவருக்கு இரத்த வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பிரித்தானியாவிலுள்ள பார்ன்ஸ்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவர்கள் லீ கார்ட்னரின் வயிற்றினுள் மருத்துவ நுண் புகைப்படக் கருவியை அனுப்பிப் பரிசோதித்த போது, அவரது வயிற்றினுள் முள்ளுக்கரண்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து ௭தையாவது விழுங்கினீர்களா ௭ன அவரை மருத்துவர்கள் வினவிய போது, 10 வருடங்களின் முன் முள்ளுக்கரண்டியொன்றை விழுங்கியமை அவருக்கு ஞாபகத்துக்கு வந்து அது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
இந்த முள்ளுக்கரண்டியானது லீ கார்ட்னரின் வயிற்றில் புண்களும் உள்ளகக் குருதிப் பெருக்கும் ஏற்படக் காரணமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து 45 நிமிட அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு லீ கார்ட்னரின் வயிற்றிலிருந்த முள்ளுக்கரண்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.