siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

நாடாளுமன்றில் சம்பந்தன் நேற்று அறிவிப்பு

23.08.2012.

 தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நியாயமான முறையில் கௌரவமானதொரு தீர்வு காணப்படவேண்டும். இதை அடிப்படையாகக் கொண்ட பேச்சுகளை முன்னெடுப்பதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் திட்டவட்டமாக இடித்துரைத்தார்.

அத்துடன், நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய செயற்றிட்டம் தயாரிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி, வடக்கு, கிழக்கில் குடிப்பரம்பல், தமிழர்களின் பாரம்பரியத்தை மாற்றியமைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை அரசு உடன்நிறுத்தவேண்டும் என்றும் சம்பந்தன் வலியுறுத்தினார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
போரின் போது சர்வதேச சட்டதிட்டங்கள் மீறப்பட்டுள்ளன. சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளன. 2009ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி இலங்கைப் பயணத்தின் முடிவில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரும், இலங்கை அரசும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டன.

போரில் ஈடுபட்ட தரப்பினர் மனித உரிமைகளை மீறியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

அதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் காணாமல் போனோர் தொடர்பில் நம்பத்தகுந்த முறையிலான நடவடிக்கை, இராணுவ மயமாக்கலின் குறைப்பு, சிவில் அமைப்புகளின் முக்கியத்துவம் மற்றும் அதிகாரப்பகிர்வுடனான அரசியல் தீர்வு ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.

இவை நடைமுறைப்படுத்தப்படவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் இதனையே வலியுறுத்தி நிற்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் 2013ஆம் ஆண்டு நடைபெறும் கூட்டத்தொடரின்போது இலங்கை அரசு அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும்.

குறிப்பாக, நல்லிணக்க ஆணைக்குழுவின் அமுலாக்கம் தொடர்பிலான தேசிய செயற்றிட்டம் தமிழ் மக்கள் பிரதிநிதிகளான எங்களுடன் கலந்துரையாடப்படாமல் தன்னிச்சையான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

நல்லெண்ணம், ஒற்றுமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு அந்த செயற்றிட்டம் தயாரிக்கப்படவில்லை. அடுத்ததாக, மூதூர் தொண்டர் நிறுவன ஊழியர்களின் படுகொலை, திருகோணமலையில் கடற்கரையில் வைத்து ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் ஆகியன தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் விருப்பம் இலங்கை அரசிடம் இருக்கவில்லை. எனினும், இது குறித்தான விசாரணையை விதப்புரை வலியுறுத்தி நிற்கின்றது.

 உண்மை வெளிவரவேண்டும் என்ற விடயத்தில் சர்வதேச சமூகம் கரிசனை கொண்டுள்ளது.

தேர்தல்
சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படாத நிலையிலேயே நாம் தேர்தலைச் சந்திக்கவுள்ளோம். தேர்தல் ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த விடயம் இருப்பது எமக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. இதையிட்டு நாம் கவலையடைகின்றோம்.

காணி அபகரிப்பு
சம்பூர், வலிகாமம் ஆகிய பிரதேசங்களில் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. அவை மீண்டும் மக்களிடம் கையளிக்கப்படவேண்டும். ஆனால், உங்கள் செயற்றிட்டம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு அமையவில்லை.

குடிப்பரம்பல் மாற்றம்
அதுமட்டுமல்லாது, வடக்கு, கிழக்கில் சில நபர்கள்மூலம் இனப்பரம்பல், தமிழர்களின் பாரம்பரியம் ஆகியவற்றை மாற்றியமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை அரசு தடுத்து நிறுத்தவேண்டும். இவற்றை இதற்கு முன்னரும் நாம் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கின்றோம். இவ்வாறான விடயங்களை நாம் ஆதாரபூர்வமாகவே சுட்டிக்காட்டுகின்றோம்.

தீர்வு
 உள்நாட்டில் தீர்வை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் கடந்த காலங்களில் தோற்றுப்போயின. இதனால் உள்நாட்டுத் தீர்வு சரிவராது என்ற நிலைமை உருவாகியுள்ளது.

டட்லி சேனாநாயக்கா ஒப்பந்தம், 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் ஆகிய முயற்சிகளை இதற்கு சான்றாகக் குறிப்பிடலாம். இதே வேளை, 2006 ஆம் ஆண்டு சிவ்சங்கர் மேனன் இலங்கை வந்திருந்த போது, நியாயமானதொரு அரசியல் தீர்வை வலியுறுத்தியிருந்தார்.

2008 ஆம் ஆண்டு பஸில் ராஜபக்ஷ இந்தியாவிற்குச் சென்றிருந்த வேளையிலும் இது குறித்துப் பேசப்பட்டுள்ளது. அத்துடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது நியாயமான அரசியல் தீர்வுக்கு 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் வழிகோலும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அரசு கூட்டமைப்பு பேச்சு
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்றுவந்த இருதரப்பு பேச்சுகள் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முடக்கமடைந்துள்ளன. இன்றுவரை பேச்சுகள் தொடராமல் உள்ளன.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிடவில்லை. அந்தக் குழு உறுதியானதாக கௌரவமானதாக இருக்கவேண்டும் என்றே சொல்கின்றோம்.

அத்துடன், தீர்வுத்திட்டப் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். ஆனால், அதன் மூலம் எட்டப்படும் தீர்வு நியாயமானதாக நீடித்து நிலைக்கக்கூடியதாக கௌரவமானதாக தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருத்தல் வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்  என்றார்