siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

கடல்மார்க்கமாக ஆஸி.செல்வோர் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு நேற்றும் 69 பேர் கைது; இரு நாள்களில் இரண்டாவது சம்பவம்

23.08.2012.இலங்கையில் இருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா விற்குச் செல்பவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த போதும் இந்த ஆபத்தான பயணத்தை மேற் கொள்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கின்றது.
ஆஸ்திரேலியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த படகு ஒன்று நேற்று அதிகாலையில் கடற்படையினரால் பிடிக்கப்பட்டது. இதில் 69 பேர் இருந்தனர். அவர்களில் 48 பேர் தமிழர்கள், 19 பேர் சிங்களவர்கள், 2 பேர் முஸ்லிம்கள்.
கடந்த இரண்டு நாள்களில் கடற்படையினரிடம் மாட்டுப்படும் இரண்டாவது அகதிகள் படகு இது. நேற்றுமுன்தினம் திருகோணமலை கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு படகுகளைக் கடற்படையினர் வழிமறித்துக் கைப்பற்றினர். அவற்றில் ஆஸ்திரேலியா செல்வதற்காக 83 பேர் இருந்தனர்.
நேற்றுக் கைப்பற்றப்பட்ட படகு நீர்கொழும்பு கடலில் பயணித்துக் கொண்டிருந்த போது கடற்படை ரோந்துப் படகிடம் மாட்டிக்கொண்டது. "ஆஷா துவா' என்று பெயரிடப்பட்ட இழுவை மீன்பிடிப்படகிலேயே 69 பேரும் ஆஸ்திரேலியா பயணமாகிக் கொண்டிருந்தனர்.
நீர்கொழும்பு, புத்தளம், வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், விசுவமடு, மட்டக்களப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லிம்களுமே படகில் இருந்து கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படையினரின் பாதுகாப்புடன் மோதர துறைக்குக் கொண்டு செல்லப்பட்டது படகு. அதிலிருந்தவர்கள் விசாரணைகளுக்காக குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வருபவர்களை அயல் நாடுகளில் தங்க வைப்பதற்கான சட்டத் திருத்தத்தை அந்த நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றி உள்ள நிலையிலும் இங்கிருந்து அகதிகளாகச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களும் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயற்சிப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது என்றும் அவர்கள் கூறினர்.
கடந்த 21 நாள்களில் மட்டும் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்ட 663 பேர் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பெருமளவானோர் தமிழர்கள்.
அதேவேளை, மேலும் பல நூற்றுக்கணக்கானோர் படகுகள் மூலமாக இதேகாலப் பகுதியில் ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்திருக்கிறார்கள்