siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

வெனிசுலா எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தீ விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு


 By rajah.
வெனிசுலாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வட பகுதியான பராகுவானாவில் அமுவே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது . உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான அமுவேயில் கடந்த சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதுடன் வெடிப்புச் சம்பவமும் நிகழ்ந்தது. இதில் 26 பேர் பலியாகினர், மேலும் 80 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 26லிருந்து 41ஆக உயர்ந்துள்ளது. 
அங்கு விபத்து ஏற்பட்டதும் அதன் அருகில் இருந்த கடைகள், வீடுகள் குலுங்கின. சுத்திகரிப்பு நிலையத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது என்று அதன் அருகில் வசித்தவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்டதாகவும், நாளை முதல் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வெனிசுலா துணை ஜனாதிபதி எலியாஸ் கூறுகையில்,
அமுவே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பலியானோர்களில் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 18 பேர் அடக்கம். இறந்தவர்களில் 6 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றார்.
இந்த விபத்து மிகவும் கவலை அளிப்பதாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது என்று வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சவேஸ் தெரிவித்துள்ளார். மேலும் 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்விபத்துத் தொடர்பாக, தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் ஜனாதிபதி ஹியூகோ சாவிஸ் தெரிவித்துள்ளார்