siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

முள்ளிக்குளம் தேவாலயத்தில் ஐந்து வருடங்களின் பின் திருவிழா

BY.rajah.27.08.2012.
முள்ளிக்குளம் தேவாலயத்தில் சுமார் ஐந்து வருடங்களின் பின் திருவிழாத்திருப்பலி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மன்னாரின் தென்பகுதியான முசலிப்பிரதேசத்தின் மீது கடந்த 2007ஆம் ஆண்டு இராணுவத்தினரின் மனிதாபிமான நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக முசலிப்பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறியிருந்தனர்.

இவ்வாறு வெளியேறியவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் முள்ளிக்குளம் மக்கள் தம்மை தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றுமாறு தொடர்ச்சியான பல அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுத்துவந்திருக்கின்றனர்.

ஆயினும் அவர்களது எந்தக்கோரிக்கையும் சம்பந்தப்பட்டவர்களால் நிறைவேற்றப்படாத நிலையில் அம் முள்ளிக்குள மக்கள் கடந்த இருமாதங்களுக்கு முன் தன்னிச்சையாக முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய காயாக்குழி மற்றும் மலங்காடு ஆகிய பகுதிகளில் குடியேறியிருக்கின்றனர்.

எதுவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் காடுகளுக்குள் குடியேறியிருக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க முள்ளிக்குளம் கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வழிபட்டு வந்த முள்ளிக்குளம் புனித பரலோக மாதா தேவாலயம் மற்றும் அதன் சுற்றுப்புறச்சூழல் அனைத்தும் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு பாரிய கடற்படை முகாம் ஒன்றும் நிறுவப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் கடற்படையினரின் பூரண கட்டுப்பாட்டிலுள்ள முள்ளிக்குளம் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா ஆவணி மாதம் 15ஆம் திகதியே இடம்பெற வேண்டியது.

ஆயினும் குறித்த தினத்தில் மடு அன்னையின் திருவிழா வெகுவிமரிசையாக இடம்பெறுவதனால் முள்ளிக்குளம் தேவாலயத்தின் திருவிழா வருடந்தோறும் ஆவணி மாதம் 26ஆம் திகதியே இடம்பெற்று வருகின்றது.

இருந்த போதும் கடந்த ஐந்து வருடங்களாக இவ்வாலயத்தில் திருவிழாத்திருப்பலிகள் இடம்பெறாத நிலையில் நேற்று வெகு சிறப்பாக இடம்பெற்றிருக்கின்றது.

மன்னார் ஆயர் அதிமேதகு இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற கூட்டுத்திருப்பலியில் பெருமளவிலான குருக்கள்,துறவியர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே புனித பரலோகமாதா தேவாலய திருவிழாத்திருப்பலியில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், நானாட்டான் பிரதேச செயலாளர் சந்திரய்யா மற்றும் நானாட்டான், மன்னார் பிரதேச சபைகளின் தலைவர்கள்,அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.


குறித்த திருவிழா திருப்பலியின் போது முள்ளிக்குளம் மக்களாகிய நாங்கள் மீண்டும் எமது சொந்த மண்ணில் குடியமர வேண்டும் எனவும்,தாங்கள் கடந்த 5 வருடங்களாக மேற்கொண்டு வந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் எனவும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

திருவிழாத்திருப்பலியின் நிறைவில் அன்னையின் திருச்சொரூப பவனியும் அதனைத் தொடர்ந்து திருச்சொரூப ஆசீரும் இடம்பெற்றது