siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

கண்ணுக்கு மையழகு

By rajah.,27.08.2012.
 தமிழர் வாழ்வில் பெண்கள் அன்று தொட்டு இன்று வரை நவரத்தினங்கள் பதித்த ஆபரணங்கள் கொண்டும், தங்க அணிகலன்களைக் கொண்டும், இயற்கைப் பொருட்கள் கொண்டும் தங்களை அழகுபடுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்றால் அது மிகையாகாது. ஒருவருடைய முகமே முதலில் பார்வைக்கு தோன்றுவது. எனவே அழகு என்றாலே முதலில் முகத்தோற்றமே முக்கியமானதாகக் கருதப்படும். பெண்கள் தமது கண்களின் அழகு தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்கள் தங்கள் கண்களை அழகு படுத்துவதற்காகவும், தங்கள் கண்களைப் பாதுகாப்பதற்காகவும் பல இயற்கை வழிமுறைகளை காலங்காலமாகப் பின்பற்றி வந்திருக்கிறார்கள். அத்துடன் இதிகாசங்கள், புராணக் கதைகள் போன்ற பழந்தமிழர் இலக்கியங்களிலும், நாட்டுப்புற, கிராமியப் பாடல்களிலும் உள்ள அடிகளில் இருந்தும் கண்ணுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் எமக்குத் தெரிய வருகிறது.
நெய் திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல்
தைவரு மகரவீணை தண்னுமை தழுவித் தூங்க
கைவழி நயனம் செல்ல கண்வழி மனமும் செல்ல
ஐயந்தண் இடையர் ஆடும் ஆடக அரங்கு காண்பீர்
கம்பராமாயாணத்தில் இனிமையான பாடலும், மகர வீணையின் இசையும் பொருந்தி இசைக்கும் போது, நடனம் ஆடுகின்ற மங்கையின் கை செல்கின்ற வழியிலே கண் செல்ல, கண் செல்கின்ற வழி பாவம் விளங்க, அவ்வழியில் அவளது மனமும் செல்ல, அழகிய இடையுடைய பெண்கள் ஆடும் அரங்குகள் இருந்தன" என்கிறான் கம்பன். மேலும் அயோத்தி மாநகரில் ஆடல் அரங்குகள் இருந்தன என்றும், அவற்றில் மடந்தையர் ஆடும்போது, அவர்களின் வேல் போன்ற கண்களின் வீச்சு, காமம் மிகுந்த இளைஞரின் நெஞ்சத்தை உருக்கும். அவர்களின் உயிர்களோ அப்பெண்களின் இடை போல் தேயும். ஆனால் ஆசை மட்டும் வளர்ந்து கொண்டே செல்லும்" என்பதை கம்பன் இவ்வாறு மிக அழகாகச் சொல்கிறான்.
அரங்கிடை மடந்தையர் ஆடுவார் அவர்
கருங்கடைக் கண் அயில் காமர் நெஞ்சினை
உருங்குவ் மற்று அவர் உயிர்கள் அன்னவர்
மருங்குல் போல் தேய்வன் வளர்வது ஆசையே
மேலும் இராமன், சீதை ஆகியோரின் உணர்வோடு ஒன்றிய சந்திப்பை கீழ்க்கண்டவாறு கம்பன் உரைக்கிறான். இதில் இருந்தும் பழங்காலத்தில் கண்ணுக்கு இருந்த முக்கியத்துவம் புலப்படுகின்றது.
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
பழைமையான இலக்கியங்களில் பெண்களின் முகம், விழி, இடை மற்றும் மார்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. பெண்ணின் முகத்தை நிலவு, மலர், நதி, இயற்கை போன்றவற்றுக்கு ஒப்பிட்டிருப்பதையும் நோக்கக்கூடியதாக உள்ளது.
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் செங்கையால்
காத்தாள்; அக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் காண்!
மலரைக் கொய்பவளாகிய ஒரு பெண்ணின் ஒளி வீசும் முகத்தைச் செந்தாமரை மலர் என்று கருதி மொய்க்கின்ற வண்டுகளை, அவள் தனது செந்நிறமான கையால் தடுத்து நின்றாள். அக்கைகளையும் காந்தள் மலர் எனக் கருதி வண்டுகள் மொய்த்தன என நளவெண்பாவில் கூறப்பட்டதில் இருந்து பெண்களை மலருக்கு ஒப்பிட்டமை நன்கு புலனாகிறது.

காக்கா! காக்கா! கண்ணுக்கு மை கொண்டு வா" போன்ற வாய் மொழி இலக்கியங்கள் ஊடாகவும், நாட்டுப்புறப் பாடல்கள் மூலமாகவும் கண்ணின் முக்கியத்துவம் நன்கு புலப்படுகிறது.

காதலின் முக்கியமான அடையாளமாகவும் கண் கருதப்படுகிறது. கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை.. என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை, கண்ணுக்கு மையழகு.. கவிதைக்கு பொய்யழகு.. அவரைக்கு பூவழகு.. அவருக்கு நான் அழகு போன்ற தற்கால சினிமாக் கவி வரிகளைக் கூட உதாரணமாகக் கூறலாம்.

அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்களின் கண்களை கயல், வில், வாள் போன்றவற்றுக்கு ஒப்பிட்டுப் பேசும் வழக்கம் காணப்படுகிறது. பழங்காலத்தில் பெண்கள் தங்கள் கண்களைப் பாதுகாப்பதற்கும், அழகு படுத்துவதற்கும் குளிர்ந்த நீரையும், இயற்கையான முறையில் செய்யப்பட்ட கண் மையையும் பயன்படுத்தி வந்தார்கள்.

இயற்கையான முறையில் செய்யப்படும் கண் மையை சிறுவர் முதல் பெரியவர் வரை, ஆண் பெண் வேறுபாடின்றி இட்டு வந்தமையை நாம் அறிந்து கொள்கிறோம். ஆரம்ப காலங்களில் பாதுகாப்பிற்காகப் பூசப்பட்ட கண் மையானது, பின்னர் அழகிற்காக இடப்படும் வழக்கமாக மாறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. மருத்துவக் குணங்கொண்ட கரிசலாங்கண்ணி விதையை எடுத்து, அதை நன்றாக வறுத்துப் பொடியாக்கி, அதனுடன் சுத்தமான எள் கொண்டு செய்யப்பட்ட நல்லெண்ணெய் கலந்து, இளம் சூடான நெருப்பில் பதமாகக் கலந்து தூய்மையான கண் மை தயாரிக்கப்படும்.

கரிசலாங்கண்ணியானது நிறைந்த மருத்துவக் குணங்கொண்ட ஒரு செடியாகும். நல்லெண்ணெய் என்பது உடலை குளிர்மைப் படுத்தக் கூடிய ஒன்றாகும். எனவே கரிசாலாங்கண்ணியும், நல்லெண்ணெயும் ஒன்று சேர்ந்து கண்களுக்குக் குளிர்ச்சியையும், பாதுகாப்பையும் கொடுக்கும். கண் மையை கண்களின் கீழ் இமை மற்றும் மேல் இமை ஆகிய இரண்டு இமைகளுக்கும் பூச வேண்டும். இரண்டு இமைகளும் ஒன்றோடு ஒன்று சேரும்போது கண்கள் சிறப்பாகப் பாதுகாக்கப்படும் என்பதே காரணம் ஆகும்.

பொதுவாக நாதஸ்வரக் கலைஞர்கள், தவில் கலைஞர்கள் ஆகியோர் கண்களுக்கு கண் மை பூசும் வழக்கத்தைக் கொண்டவர்கள். காரணம் என்னவெனில்; தாங்கள் வாசிக்கும் தவில், நாதஸ்வர இசைக்கேற்றவாறு கண்களைப் பாவத்துடன் அசைத்து அழகாகத் தோன்றுவதற்கும், சூழலிலுள்ள மாசுக்களில் இருந்து தங்கள் கண்களை பாதுகாப்பதற்குமே ஆகும்.

தற்காலத்தில் உள்ள அழகு நிலையங்களில் கண்களின் கீழ் உள்ள கரு வளையங்களை நீக்குவதற்காகவும், கண்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பதற்காகவும் பல்வேறுபட்ட வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறார்கள். கண்களுக்கு அடியில் செய்யப்படும் மசாஜ், குளிர்ந்த நீரில் பிழிந்த சுத்தமான பஞ்சை மூடிய கண்களின் மேல் வைப்பது, வெள்ளரிக்காய்த் துண்டுகளை மூடிய கண்களின் மேல் வைப்பது, தேவையான சந்தர்ப்பங்களில் அளவான மேக்கப் போன்றவற்றைக் கூறலாம்" என்கிறார்கள் அழகுக் கலைஞர்கள்.

சத்தான உணவு, பால், இயற்கைக் காய்கறி மற்றும் கனி வகைகள், தேவையான அளவு ஓய்வு, நல்ல தூக்கம், சுத்தமான காற்று, அளவான உடற்பயிற்சி முதலியனவும் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன் கண்களையும் அழகாக்கும்" என வைத்தியர்கள் கூறுகிறார்கள்.

ஆகவே வாழ்விலக்கணத்தை உலகிற்குக் கொடுத்த வள்ளுவன் கண்ணோடு கண் நோக்கும் போது வாய்ச் சொற்களுக்கு என்ன பயன் இருக்க முடியும் என்பதை,

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின்
வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல

என அழகாக எடுத்துரைப்பதில் இருந்து கண்ணுக்கு உள்ள முக்கியத்துவம் நன்கு புலப்படுகிறது. எனவே கண்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் பேணுவோம்