siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

இலங்கையில் மீன்பிடிக்க சீனர்களுக்கு உரிமை- இலங்கை கடற்படையே அம்பலப்படுத்தியது!

 
08.08.2012.
கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் இராமேஸ்வரம் மீனவர்களை சீனர்கள் தாக்கியதாக கூறப்படும் புகார்களை மறுத்து வந்த இலங்கை கடற்டையே கிழக்கில் தமிழர்கள் மீன்பிடிக்கும் கடற்பரப்பில் சீனர்கள் இலங்கையின் அனுமதியோடு மீன்பிடித்துக் கொண்டிருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டு மீனவர்களும் தமிழீழ மீனவர்களும் காலம்காலமாக பாக் ஜலசந்தி கடற்பரப்பில் எந்தவித பிரச்சனையுமின்றி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சதீவில் வலைகளை உலரவைத்து ஓய்வெடுத்து ஆண்டுக்கொருமுறை நடைபெறும் அந்தோனியார் கோயில் திருவிழாவில் பங்கேற்று தொப்புள் கொடி உற்வுகளாய் தமிழர் கடற்பரப்பில் வலம் வந்தனர்.
ஆனால் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக இனவெறி கொண்ட சிங்களக் கடற்படையினர் தமிழர் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்தாலே சுட்டுக் கொலை செய்வது என்ற போக்கையே கடைபிடித்து வருகிறது.
இதுவரை 600 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் கச்சதீவில் சிங்களக் கடற்படையினருடன் சீனர்கள் நடமாடுவதாக முதலில் புகார் எழுந்தது.
அந்தோனியார் திருவிழாவுக்குப் போன தமிழக மீனவர்களுக்கு சீன மொழியிலான கூடாரங்கள் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலின் போது சீனர்களும் உடனிருந்தனர் என்று சில சம்பவங்களின் போது தமிழக மீனவர்கள் புகார் கூறியிருந்தனர்.
ஆனால் அதையெல்லாம் இலங்கை கடற்படை மறுத்து வந்தது. இந்திய அரசும் எதுவும் சொல்லாமல் இருந்து வந்தது.
திருகோணமலை அருகே சீனர்கள் படகு
இந்நிலையில் இலங்கை கடற்படை நேற்று வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில், தமிழர்கள் மீன்பிடிக்கும் இலங்கையின் கிழக்குக் கடற்பரப்பில் அதாவது அம்பாறையின் பொத்துவில் பிரதேசத்தில் அருகம்பே கடற்பரப்பில், 2 சீன படகுகள் மூலம் சட்டவிரோதமாக மீன்பிடித்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
அத்துடன், அதில் ஒரு படகில் 19 சீனர்களும் மற்றொரு படகில் 18 சீனர்களும் இருந்தனர் என்றும் கூறியுள்ளது. இவர்கள் அனைவரும் திருகோணமலை துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டு திருகோணமலை துறைமுக காவல்நிலைய பொலிஸாரிடம் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட 2 சீன படகுகளும் இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சகத்தால் பதிவு செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் துடிதுடிப்பு
இலங்கையைச் சுற்றியுள்ள நாடுகளைக் கடந்துதான் சீனர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய வேண்டும். இந்தியா- பாகிஸ்தான் கடற்பரப்பைப் போலவோ, இந்தியா- இலங்கை கடற்பரப்பைப் போலவோ சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே எந்த ஒரு கடற்பரப்பும் இல்லாத நிலையில் சீனர்கள் எப்படி இலங்கை கடற்பரப்பில் அதுவும் தமிழர்கள் மீன்பிடிக்கும் கடற்பரப்பில் நுழைந்தனர்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
பாரம்பரிய உரிமை கொண்ட தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களுக்கு உரிமை உள்ள கச்சதீவு கடற்பரப்பில் மீன்பிடித்தாலே சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படை எங்கோ இருந்து சம்பந்தமே இல்லாமல் வந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த 37 சீனர்களை சுட்டுக் கொல்லாமல் "பாதுகாப்பாக" கைது செய்திருக்கிறது
இதனிடையே சீன ஊடகங்களோ, கைது செய்யப்பட்ட சீனர்கள் அனைவரும் இலங்கை மீன்பிடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தவர்கள் என்று கூறுகின்றன. அப்படி இலங்கை நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் எனில் இலங்கை கடற்படை எப்படி கைது செய்திருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீனர்களுக்கு மீன்பிடி உரிமை
இதற்குப் பதிலாக சொல்லப்படும் ஒரு பதில் என்னவெனில், இலங்கையில் இருக்கும் சீனர்களுக்கு 200 கடல் மைல் தொலைவில் அதாவது ஆழ்கடலில் மீன்பிடிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இவர்கள் 10-15 கடல்மைல் தொலைவிலேயே மீன்பிடித்தனர். இதனால்தான் இவர்களை இலங்கை கடற்படை கைது செய்ய வேண்டிய நிலைமை வந்திருக்கிறது என்கின்றனர் அம்பாறை உள்ளுராட்சி நிர்வாகிகள்.
ஆக இலங்கையில் சீன மீனவர்கள் "பாதுகாப்பாக" தமிழர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றனர் என்ற உண்மை மட்டும் உலகுக்கு இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையாலேயே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே நிதர்சனம்

0 comments:

கருத்துரையிடுக