siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் காட்டுக்குள் வசிக்கும் முள்ளிக்குளம் மக்கள்


By.Rajah.
தமது சொந்தக் கிராமமான முள்ளிக்குளம் கிராமத்துக்கு சற்றுத் தொலைவில் உள்ள மலங்காடு காட்டுப்பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி வாழ்ந்து வரும் முள்ளிக்குளம் பகுதி மக்கள், தாம் மீளக் குடியமர்த்தும் வரை காட்டுக்குள் வாழப்போவதாகத்  தெரிவித்தனர்.


முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக இடம் பெயர்ந்து சென்றனர்.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இவர்கள் தமது கிராமத்தில் மீள் குடியமரச் சென்றபோது அங்கு நிலை கொண்டிருக்கும் கடற்படையினர் அந்த மக்களை முள்ளிக்குளம் கிராமத்தில் குடியமர அனுமதிக்கவில்லை.
இந்தக் கிராமத்தைக் கடற்படையினர் அதியுயர் பாதுகாப்பு வலயமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
தமது சொந்தக்கிராமத்தில் மீள் குடியமரும் எண்ணத்துடன் நீண்ட நாள் போராட்டத்தின் மத்தியில் முள்ளிக்குளத்திற்கு சற்றுத்  தொலைவில் உள்ள மலங்காடு எனும் காட்டுப்பிரதேசத்தினுள் அடிப்படை வசதிகள் எவையுமற்ற நிலையில்
சுமார் 145 குடும்பங்கள் இவ்வாறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான தண்ணீர்த் தேவைகளுக்கு அருகில் உள்ள குளத்தைப் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினால் குளம் வற்றிய நிலையில் காணப்படுகின்றது.
இந்த மக்களுக்கான குடிநீர் இராணுவத்தினரால் வழங்கப்படுகின்ற போதிலும் ஏனைய தேவைகளுக்கு தண்ணீரைப்பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர் நோக்கி வருகின்றனர்.
அத்துடன் காட்டு யானைகளின் அட்டகாசமும் அதிகரித்துள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.
 எத்துணை சிரமங்கள் வந்தாலும் தாம் தமது சொந்தக்கிராமத்தில் மீளக்குடியமர்வதில் எந்த மாற்றமும் இல்லை என அந்த மக்கள் தெரிவித்தனர்.


இவர்களுடைய நிலை தொடர்பாக முசலி பிரதேச செயலாளர் கேதீஸ்வரனைத் தொடர்பு கொண்டு கேட்ட போது,
கடந்த மாதம் 24 ஆம் திகதி இங்கு வருகை தந்த மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவினர் நிலைமையினை ஆராய்ந்துள்ளனர்.
இந்த மக்கள் தற்போது வசிக்கும் இடத்தில் தொடர்ந்து வசிக்க வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். எனவே இவர்கள் தற்போதுள்ள இடத்தில் இருக்க உடன்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.