siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 19 செப்டம்பர், 2012

வல்வெட்டித்துறை இளைஞர் யஹரவப்பொத்தானைக்கு கடத்தல்; சிவில் பாதுகாப்புக் கூட்டத்தில் நேற்றுத் தகவல்

19.09.2012.By.Rajah.
 
பெரும்பான்மை இனத்தவர்களால் வல்வெட்டித்துறை ஆதி கோயிலடிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு ஹெரவப் பொத்தானை வரை கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவ்வாறான கடத்தல்கள் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் அ.அனந்தராஜ் தெரிவித்தார்.
மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போதே வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வல்வெட்டித்துறை ஆதி கோயிலடிப் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜா ஜனார்த்தன் என்ற இளைஞன் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டுள்ளார்.
இவர் வேலை செய்யும் காப்புறுதி நிறுவனத்தை விட்டு பணத்துடன் வெளியே வந்தபோது வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். வானில் வைத்து அவருக்கு குடிப்பதற்கு ஒரு வகைப் பாணத்தை அந்த நபர்கள் வழங்கியுள்ளனர். அதன் பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாது.
பின்னர் ஹெரவப் பொத்தானையில் ஒரு வீட்டில் வைத்து அவரை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். கடத்தியவர்கள் சிங்கள மொழியிலேயே சரளமாகப் பேசியுள்ளனர். பின்னர் அவர்களின் பிடியில் இருந்து தப்பித்த மேற்படி இளைஞர் அங்குள்ள கடையொன்றிலிருந்து வீட்டாருடன் தொடர்பு கொண்டதையடுத்து மீட்கப்பட்டுள்ளார். தற்போது வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தக் கடத்தல் தமிழ் ஆயுதக் குழுக்கள் மேற்கொள்ளவில்லை. ஆனையிறவு, ஓமந்தை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடிகளைத் தாண்டி எவ்வாறு இந்த இளைஞனை அவர்கள் கொண்டு சென்றனர். இவ்வாறான சம்பவங்கள் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தையே ஏற்படுத்துகிறது என்று அனந்தராஜ் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஊர்காவற்துறை பிரதேச செயலர் திருமதி எழிழரசி அன்ரன் யோகநாயகம்,ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் 2 பிரதேச செயலர் பிரிவுகளுக்குப் பொறுப்பாக உள்ளது. எமது பிரதேச செயலர் பிரிவில் கடந்த 7 மாத காலமாக சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம் நடைபெறவில்லை.
வேலைணைப் பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு, மாடுகளைப் பிடித்தல் என்பன தொடர்ந்தும் நடைபெறுகின்றன. அத்துடன் அங்குள்ள பாதுகாப்புக் குழுக்கள் மூலம் சட்டவிரோத மணல் ஏற்றிச் செல்பவர்களைப் பிடித்தால் அவர்களிடம் தண்டப் பணம் அறவிட்ட பின்னர் விடுதலை செய்கின்றனர். அவர்கள் மீண்டும் மீண்டும் மணல் அகழ்வில் ஈடுபடுகின்றனர்.
அத்துடன் அவர்களைப் பிடித்துக் கொடுக்கும் சிவில் பாதுகாப்புக் குழுவினருக்கு உயிராபத்து எற்படுகின்றது என்றார். இதற்குப் பதிலளித்த ஊர்காவற்றுறைப் பொலிஸ் அத்தியட்சகர் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாகத் தெரிவித்தார்