காதல் திருமணங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிவதற்குக் காரணம் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும், ஆணும், மன முதிர்ச்சியில்லாத நிலையில் திருமணம் செய்து கொள்வதே என்கிறார் கவிஞரும், எழுத்தாளருமான பேராசிரியர் பழமலய்.
தர்மபுரி மாவட்டத்தில் வன்னியர் இனப்பெண்ணை தலித் இளைஞர் ஒருவர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதை அடுத்து தலித்துகளுக்கு எதிராக அம்மாவட்டத்தில் எழுந்த வன்செயல்கள் குறித்து பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் சனிக்கிழமை தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன
தான் காதல் திருமணங்களுக்கு எதிராக இல்லை.ஆனால், பல காதல் திருமணங்கள் “நாடகத் திருமணங்கள்” என்று வர்ணித்த ராமதாஸ், பெண்களுக்கு திருமண வயதை 21ஆக உயர்த்தினால்தான் அவர்கள் மன முதிர்ச்சியுடன் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் நிலை வரும் என்று கூறியிருந்தார்
இது குறித்து விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞருமான பழமலய் , காதல் திருமணங்கள் ‘மேல் சாதி’ மாப்பிள்ளைகள் ‘கீழ் சாதி’ப் பெண்களைத் திருமணம் செய்வதாக இருந்தால் அது எந்தப் பிரச்சினையையும் கிளப்புவதில்லை. ஆனால், ‘கீழ் சாதி’யைச் சேர்ந்த ஒரு ஆண், ‘மேல் சாதி’யைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால்தான் அது ராமாயணம் போல சீதையை மீட்கும் போருக்கு இட்டுச்செல்கிறது என்றார்
இதன் மூலம், கலப்புத் திருமணங்களை சாதி ஒழிப்புக்கு ஒரு அடிப்படையாக முன் வைத்த பெரியார் போன்றவர்களின் நிலைப்பாடு சரியல்ல என்கிறீர்களா என்று கேட்டதற்கு பதிலளித்த பழமலய், மனிதர்கள் பிரதேச எல்லைகளையும், சாதிகளையும் கடந்து கலக்கத்தான் வேண்டும் என்றார். ஆனால் சாதிகள் தங்களது இருப்புக்காகவும், இட ஒதுக்கீடு பலன்களுக்காகவும், எண்ணிக்கையை பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கின்ற காலத்தில், சாதி விட்டு சாதி மாறி நடக்கும் திருமணங்களுக்கு எதிர்ப்பு இருப்பது புரிந்துகொள்ளக்கூடியதே என்றார் அவர்
பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணங்களும் தோல்வியில் முடிவடைகிறதே என்று கேட்டதற்கு பதிலளித்த பழமலய், அதற்குக் காரணம் , பெற்றோர்கள் பணம் போன்ற பிற காரணங்களுக்காக திருமணம் செய்விப்பதுதான் என்றார்
ஆயினும், தனது வாழ்க்கையைத் தீர்மானித்துக்கொள்ள வயது வந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிமை இல்லை என்கிறீர்களா என்று கேட்டதற்கு, இது தனிமனித உரிமை பேசுபவர்களின் வாதம் என்றார் பேராசிரியர் பழமலய்.
இந்தியாவில், தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் தம்மை ஆளப்போகிறவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை, 18 வயதானவர்களுக்கு சமுதாயம் தந்துள்ள நிலையில், தங்களது சொந்த வாழ்க்கையில் தமக்கு விருப்பமானவர்களை தங்களது வாழ்க்கைத் துணைவர்களாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்களுக்கு மறுப்பது சரியா என்று கேட்டதற்கு, வாக்குரிமையையே சரியாகப் பயன்படுத்தாத சமூகம்தான் இந்தியச் சமூகம், மேலை நாடுகளில் காணப்படுவது போல கல்வியறிவும் முதிர்ச்சியும் அடையவில்லை என்றார் பழமலய்