siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

இதுவரை 42 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன; அமைச்சர் ஜோன் செனவிரட்ன தகவல்

09.08.2012.
news
50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் செயற்திட்டத்தில் இதுவரை 42 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்களுக்கு நிரந்தர நியமனம் விரைவில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைய 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் செயற்திட்டம் அமைச்சரவையின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டின் பின்னர் முதன்முறையாக பெரும் எண்ணிக்கையான பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நீண்டகாலமாக பட்டச் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பின்றி இருந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆறு மாத பயிற்சிக் காலத்தின் பின்னர் இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 16478 பட்டதாரிகளும் மாகாணசபைகளுக்கு 4170 பட்டதாரிகளும் விவசாய அமைச்சுக்கு 2560 பட்டதாரிகளும் அரச பொதுநிர்வாக அமைச்சுக்கு 1500 பட்டதாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கில் யாழ் மாவட்டத்தில் 2238 பட்டதாரிகளுக்கும் கிளிநொச்சியில் 113 பட்டதாரிகளுக்கும் முல்லைத்தீவிலிருந்து 131 பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னர் பட்டம் பெற்றவர்களுக்கே நாம் தற்போது வேலைவாய்ப்புக்களை வழங்கியுள்ளோம். 2010 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர்களுக்கு 2013 ஆம் ஆண்டிலும்- 2011 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர்களுக்கு 2014 ஆம் ஆண்டிலும் வேலைவாய்ப்புக்களை வழங்க அரசாங்கம் திட்டங்களைத் தயாரித்துள்ளது.

சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கும் பட்டதாரிகளுக்கு தற்போது மாதாந்தம் அடிப்படைச் சம்பளமாக 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. இவர்கள் நிரந்தரமாக்கப்பட்டதும் அடிப்படைச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாவுடன் ஏனைய கொடுப்பனவுகளையும் சேர்த்து மாதாந்தம் 23500 ரூபாவைப் பெற்றுக்கொள்வார்கள்.

தற்போது வேலைவாய்ப்புப் பெற்றிருக்கும் அனைத்துப் பட்டதாரிகளும் நிரந்தர நியமனம் பெற்ற பின்னர் சாதாரண அரசாங்க உத்தியோகத்தர்களைப் போன்று விடுமுறைகள் மற்றும் இடமாற்றங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சகல வசதிகளையும் கொண்டுள்ளார்கள் என்றார்.

அத்துடன் நாட்டில் தற்பொழுது மூன்று வீட்டுக்கு ஒரு பட்டதாரிகள் உள்ளனர். எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக