09.08.2012. | |||||
வவுனியா சிறையில் இடம்பெற்ற
அசம்பாவிதங்களை அடுத்து கைதிகள் மீது பொலிஸாரும் சிறைக்காவலர்களும் மேற்கொண்ட
மோசமான மிலேச்சத்தனமான தாக்குதலால் காயங்களுக்கு இலக்காகி கோமா நிலையில் ராகம
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் நேற்று அதிகாலை
சிகிச்சை பயனின்றி அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் பாஷையூரைச் சேர்ந்த மரியதாஸ் நேவிஸ்
டெல்றொக்ஷன் (வயது 36, இதுவரை இவரது பெயர் டில்ருக்ஷன் என்றே ஊடகங்களில் வெளியாகி
வந்தது) என்ற கைதியே இவ்வாறு உயிரிழந்தார். நேற்றுக் காலை டெல்றொக்ஷனின் தந்தையும்
தாயும் ராகம வைத்தியசாலையில் உள்ள மகனைப் பார்வையிடுவதற்கான அனுமதியைப்
பெற்றுக்கொள்வதற்காக மகர சிறைச்சாலைக்குச் சென்றபோதே அவர் உயிரிழந்த விடயம்
அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
வவுனியா சிறையில் நடந்த கொடூரமான தாக்குதல்
காரணமாக கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த கணேஸ்
நிமலரூபன் (வயது 28) என்ற கைதி மரணமான நிலையில் தற்போது டெல்றொக்ஷனும்
உயிரிழந்துள்ளமை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின்
பாதுகாப்பைக் கேள்வி குறியாக்கியுள்ளதாக அரசியல் தலைவர்களும் மனித உரிமை
ஆர்வலர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி வவுனியா
சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி
சிறைக் காவலர்கள் மூவரைத் தடுத்து வைத்தனர். கைதிகளிடமிருந்து சிறைக் காவலர்களை
மீட்பதற்காக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டனர்.
அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையினால்
சிறைக்காவலர்கள் மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தின்போது தமிழ் அரசியல் கைதிகள்
மீது மிக மோசமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பல கைதிகள் கடுமையான
காயங்களுக்கு உள்ளாகினார்கள்.
அதில் ஏற்கனவே உயிரிழந்த நிமலரூபன், நேற்று
உயிரிழந்த டெல்றொக்ஷன் ஆகியோரும் அடங்குவர். சிறைச்சாலை அசம்பாவிதங்களை அடுத்து
அன்றைய தினமே தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைக்கு மாற்றப்பட்டனர். அங்கும்
மேசமாகத் தாக்கப்பட்ட அவர்கள் கொழும்பு மகர சிறைச்சாலைக்கும், கண்டி போகம்பரை
சிறைச்சாலைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
இவ்வாறு மகர சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகளுள்
ஒருவரான டெல்றொக்ஷன் கோமா நிலையில் ராகம வைத்தியசாலையில் 38 நாள்களின் பின்னர்
நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
ராகம வைத்தியசாலைக்கு மகனை பார்வையிடச் சென்ற
தந்தையார் மரியதாஸ் உதயனுக்குத் தெரிவிக்கையில், ராகம வைத்தியசாலையில் உள்ள எனது
மகனைப் பார்வையிடுவதற்காக நானும் எனது மனைவியும் நேற்று அங்கு சென்றோம். மகர
சிறைச்சாலைக்கு சென்று மகனைப் பார்வையிட அனுமதி பெறவேண்டும்.
அதற்காக நேற்று காலை 9 மணிக்கு அங்கு சென்றேன்.
அப்போது அங்கிருந்த சிறை அதிகாரி எனது மகன் உயிரிழந்த விடயத்தை என்னிடம் கூறினார்.
நேற்று அதிகாலை 2.30 மணிக்கு அவர் உயிரிழந்ததாகச் சிறை அதிகாரி கூறினார்.
இதன் பின்னர் நேற்று மாலை நீதிபதியுடன் சென்று
எனது மகனின் சடலத்தைப் பார்வையிட்டேன். அவரது சடலம் ஐஸ் பெட்டி ஒன்றில்
வைக்கப்பட்டிருந்தது. மகனின் சடலத்தை நாளை மதியம் (இன்று) தருவதாக அங்கு அதிகாரிகள்
என்னிடம் தெரிவித்தனர் என்றார்.
இறுதிச் சடங்குகளுக்காக மகனின் சடலம் இன்று
யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படும் எனவும் மரியதாஸ் கூறினார்.
| |||||
|
வியாழன், 9 ஆகஸ்ட், 2012
கோமாவில் இருந்த அரசியல் கைதி நேற்று அதிகாலை உயிரிழந்தார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக