siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

சிரியாவில் மருந்துகள் இல்லாமல் அவதிப்படும் நோயாளிகள்: மக்களின் உயிருக்கு ஆபத்து

புதன்கிழமை, 08 ஓகஸ்ட் 2012,
சிரியாவில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக தொடர் சண்டை நடந்து வருவதால், மருந்து நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். சிரியாவில் போராட்டக்காரர்களை ஒடுக்க இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா மறைமுக ஆதரவும் அளித்து வருவதால், டமாஸ்கஸ், ஹாம்ஸ், அலெப்போ உள்ளிட்ட பெருநகரங்களில் தொடர்ந்து சண்டை நடக்கிறது.
இதனால் இங்குள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. சிரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையினாலும், மூலப்பொருட்கள் கிடைக்காததாலும் மருந்து நிறுவனங்கள் இந்த முடிவை மேற்கொண்டுள்ளன.
போதிய மருந்துகள் கிடைக்காததாலும், தொடர் சண்டையினால் கட்டிடங்கள் சேதமடைந்ததாலும் சில மருத்துவமனைகளும் மூடப்பட்டு விட்டன. இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீரிழிவு, புற்றுநோய், மஞ்சள் காமாலை, வயிற்று போக்கு, காசநோய், சிறுநீரக கோளாறு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருந்து கிடைக்காததால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
பல மாதங்களாக நடக்கும் சண்டையால் சிரியாவின் சுகாதாரத் துறைக்கு சொந்தமான, 200 ஆம்புலன்சுகள் சேதமடைந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உணவு கையிருப்பும் கணிசமான அளவில் குறைந்து விட்டதால் உணவு பஞ்சம் ஏற்படும் சூழல் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. ஏற்கனவே சிரியாவிலிருந்து, 1.5 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக