siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 1 செப்டம்பர், 2012

உணவுமின்றி 9 நாள்களாகக் கடலில் தத்தளித்த 43 இலங்கையர்கள் மீட்பு; ஆஸ்திரேலியா நோக்கிச் செல்கையில் துயரம்

01.09.2012.BY.rajah.ஆஸ்திரேலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது படகு இயந்திரம் பழுதடைந்ததால் 9 நாள்களாக உணவும் இன்றிக் கடலில் தத்தளித்த 43 இலங்கையர்களைத் தாங்கள் மீட்டுள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பட்டினியால் வாடி வதங்கி, சாகக் கிடந்த நிலையில் அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என்று அந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.
இலங்கையில் இருந்து புறப்பட்ட இவர்களின் படகு இந்தோனேஷியாவுக்கு அருகில் பயணித்துக் கொண்டிருக்கையில் இயந்திரம் பழுதடைந்து, படகு தத்தளிக்க ஆரம்பித்து விட்டதாக காப்பாற்றப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
சுமத்திராவுக்கு அருகில் உள்ள மென்டாவி என்ற தீவையொட்டிய கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகைக் கண்டு மீனவர்கள் இந்தோனேஷிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதை அடுத்து இலங்கையர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் என்று இந்தோனேஷிய பொலிஸ் கப்டன் அப்டுராச்மன் சுர்யன் எர் காரா தெரிவித்தார் என "அஸோசியேட் பிரஸ்' செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்களில் நான்கு பெண்களும் மூன்று சிறுவர்களும் அடங்கியிருந்தனர்.
"9 நாள்களுக்கு முன்னரே படகின் இயந்திரம் முற்றாகச் செயலிழந்துவிட்டது. அத்தோடு அவர்களிடம் இருந்த உணவும் முடிவடைந்துவிட்டது'' என்கிறார் சுர்யன்எர்காரா.
இலங்கையில் வன்முறைகள் காரணமாகத் தாம் ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்குடன் படகில் சென்று கொண்டிருந்தனர் என்று, மீட்கப்பட்டவர்கள் இந்தோனேஷியப் பொலிஸாரிடம் தெரிவித்திருக்கின்றனர் என்று "அஸோசியேட் பிரஸ்' கூறுகின்றது