25.07.2012.மக்கள் தொகை பெருகி வருவதால்,
ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தையே போதும் போன்ற கட்டுப்பாடுகளை சீனா அரசு
விதித்துள்ளது.
இதனை மீறி ஒரு சில தம்பதிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப குழந்தைகள் பெற்று
வருகின்றனர். சட்டத்தை மீறி அதிக குழந்தை பெற்றால் ஒவ்வொரு குழந்தைக்கும் அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு அபராதம் செலுத்த முன்வந்தும் அப்பாவி தம்பதியின் 3-வது குழந்தையை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்துள்ளனர் அரசு ஊழியர்கள். இச்சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீனாவில் உள்ள தாஜி என்ற கிராமத்தைச் சேர்ந்த பான் சுன்யான் என்ற 31 வயதான பெண்ணுக்குத் தான் அந்தக் கொடுமை நடந்துள்ளது. 3-வது குழந்தைக்கு தாயான அந்தப் பெண், 8 மாத கர்ப்பமாக இருந்த போது, உள்ளூர் அதிகாரிகள் அவரை பிடித்து, தனி அறையில் 2 பெண்களுடன் சேர்த்து அடைத்து வைத்தனர். பின்னர் 4 நாட்களுக்குப் பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்ய ஒப்புக்கொண்டதாக கட்டாயப்படுத்தி விரல் ரேகை மூலம் ஒப்புதல் பெற்றனர். அப்போது அவருக்கு ஒரு நர்ஸ், ஊசி மூலம் மருந்து செலுத்தியுள்ளார். அதன்பிறகு சிறிது நேரத்தில் குழந்தை இறந்தே பிறந்தது. அக்குழந்தையின் உடல் முழுவதும் கறுப்பு மற்றும் நீல நிறமாக இருந்ததாக குழந்தையின் தாய் பான் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதுபற்றி பானின் கணவர் வூ லியாஞ்சி கூறுகையில், 3-வது குழந்தை பெறுவதற்கான அபராத தொகையை நான் செலுத்தி விட்டேன். அதன்பிறகும் கருக்கலைப்புக்கு அதிகாரி உத்தரவிட்டார் என்றார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கறிஞர்களின் ஆலோசனையைப் பெற்று வழக்கு தொடர்வதற்காக பெய்ஜிங் சென்றார் வூ லியாஞ்சி. ஆனால் அதிகாரிகளால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என சந்தேகமடைந்த அவர், வழக்கு போடும் எண்ணத்தை கைவிட்டுள்ளார். ஆனால் இணையத்தளம் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இந்த மோசமான சம்பவத்தினால் மிகவும் மனமுடைந்த அந்த தம்பதியர், அடுத்த குழந்தையை பெற்றுக் கொள்ள முயற்சிக்கவில்லை. நாங்கள் ஏறத்தாழ இறந்துவிட்டது போல் உணர்கிறோம். வாழ்க்கையின் பாதியை இழந்துவிட்டோம் என்று வேதனையுடன் அவர்கள் கூறுகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து சீனாவில் ஒரு குழந்தை திட்டத்திற்கு எதிரான விமர்சனங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அதற்குப் பதிலாக மக்கள் தொகையை கட்டுப்படுத்த புதிய கொள்கையை உருவாக்கவும் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள் |
புதன், 25 ஜூலை, 2012
பெண்ணுக்கு கட்டாய கருக்கலைப்பு: சீனாவில் தொடரும் அவலம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக