சென்னை அருகே தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் தனது மனைவியைக் கொலை செய்த வழக்கில் அந்த பேராசிரியருடன் தொடர்பில் இருந்து வந்த சென்னை மாணவி ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொலை நடந்தது தெரிந்தும், அதை மறைத்து போலீஸாருக்குத் தெரிவிக்காத குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தடயத்தை மறைக்க உதவியதாக வழக்குப் போடப்பட்டுள்ளது.

சென்னை அருகே படப்பையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர் நடராஜன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

கல்லூரியில் படித்து வரும் பல்வேறு மாணவிகளுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார் நடராஜன். இதுகுறித்து விஜயலட்சுமிக்குத் தெரிய வந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மனைவிக்கு தனது கள்ளத் தொடர்புகள் குறித்துத் தெரிய வந்ததால் அவமானமடைந்த நடராஜன், விஜயலட்சுமியை ஊரிலிருந்து நைசாக சென்னைக்கு வரவழைத்துக் கொலை செய்தார். பின்னர் தனது வீட்டுக்கு அருகிலேயே கால்வாயில் புதைத்து விட்டார்.

மிகக் கொடூரமான முறையில் மனைவியைக் கொலை செய்த நடராஜனின் செயல் அனைவரையும் அதிர வைத்தது. இந்த நிலையில் நடராஜனுக்கு கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஒரு மாணவியுடன் நெருக்கமான தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இவருடன்தான் கடந்த 2 வருடமாக தனது வீட்டில் மனைவிக்குத் தெரியாமல் குடும்பமும் நடத்தி வந்தார் நடராஜன்.

இதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அந்த மாணவியை பிடித்து விசாரித்தபோது அவருக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனி என்ற மாணவிக்கும், நடராஜனுக்கும் கள்ளத் தொடர்பு இருப்பது போலீஸாருக்குத் தெரிய வந்தது.

இந்த கீர்த்தனி, நடராஜன் தற்போது வேலை பார்த்து வரும் கல்லூரியிலேயே எம்.டெக் படித்து வருகிறார். இவருடனும் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் நடராஜன். இதையடுத்து கீர்த்தனியைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் சரிவர தகவல் சொல்லவில்லை. இதனால் போலீஸாரின் சந்தேகம் வலுத்தது.

மேலும் நடராஜன் பயன்படுத்தி வந்த செல்போனில் உள்ள சிம் கார்டு கீர்த்தனியின் பெயரில்தான் வாங்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் கீர்த்தனியால் சரியாக விளக்க முடியவில்லை. மேலும் அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்ததையும் போலீஸார் கண்டுபிடித்தனர். இதனால் அவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது உறுதியானது.

கொலை நடந்த அன்று கீர்த்தனி, நடராஜன் வீட்டில்தான் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் விஜயலட்சுமி கொலை குறித்தும் அவருக்கு ஏற்கனவே தெரிந்துள்ளது. இருப்பினும் அதுகுறித்து சத்தம் காட்டாமல் இருந்துள்ளார்.

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவரை மகளிர் காப்பகத்தில் போலீஸார் அடைக்கவுள்ளனர்.